விரிவான செய்திகள் 

இலங்கை தூதரக முற்றுகை: ஸ்டாலின் உட்பட ஆயிரக்கணக்கானோர் கைது !

06 March, 2013 by adminதிமுக தலைமையில் சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் 05.03.2013 அன்று நடைபெற்றது. பல திமுகாவினர் புலிக்கொடிகளைத் தாங்கியவண்ணம் திரண்டுவந்து இப் போராட்டத்தில் கலந்துகொண்டது அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தது என்று சொன்னால் அது மிகையாகாது. அத்தோடு பாலச்சந்திரன் படங்கள் அடங்கிய பதாதைகளையும் அவர்கள் தாங்கி நின்றார்கள். பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்ட இப் போராட்ட பேரணி, இலங்கை தூதரகம் நோக்கி நகர முயன்றது. இதனை தடுத்து நிறுத்த பொலிசார் படாத பாடு படவேண்டி இருந்தது.

இந்த முற்றுகைப் போராட்டத்தில், திராவிடக் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள், என திமுகாவின் கூட்டணிக் கட்சிகள் கலந்துகொண்டது. புலிக்கொடியை ஏந்திவந்த பலர் கூடவே கொடூரமாகச் சித்தரிக்கப்பட்ட ராஜபக்ஷவின் படங்களையும் ஊர்வலமாகத் தாங்கிவந்தார்கள். இறுதியில் புலிக்கொடியை உயர்த்திப் பிடித்தவாறு, மகிந்தரின் படத்துக்கு நெருப்பு மூட்டினார்கள். எரிந்தான் ராஜபக்ஷ என்ற கோஷங்கள் விண்ணைப் பிளந்தது. தமிழ் நாட்டில் ஏற்கனவே பல கட்சிகள், ஈழத் தமிழர் சார்பான போக்கை கடைப்பிடித்து வருகிறது. காங்கிரசுடன் கூட்டு வைத்திருப்பதால் திமுக இவ்விடையத்தில் , சற்று விலகியே நின்றதை கடந்த கால கசப்பான அனுபவங்கள் பல எமக்கு உணர்த்தி இருக்கிறது. ஆனால் அதனையும் மீறி, பாலச்சந்திரன் கொலை தொடர்பாக தமிழ் நாட்டில் தோன்றியுள்ள உணர்வலை, ஈழத் தமிழர்கள் படும் இன்னல்களை தமிழக மககள் நன்கு உணர்ந்துள்ளதை தற்போது எடுத்துக்காட்டியுள்ளது.

திமுக வின் மாறுதலையும் அது உணர்த்தி நிற்கிறது. இந்திய மத்திய அரசுக்கு திமுக எவ்வகையான அழுத்தத்தை பிரயோகிக்க முடியும் என்பதனை நன்கு உணர்ந்த சிலர் இம் மாற்றத்தை பயன்படுத்த தவறவில்லை. குறிப்பிட்ட ஒரு கட்சியோ இல்லை தலைவரோ ஈழத் தமிழர் பற்றி பேசவேண்டும் என்ற நிலைபோய், தற்போது தமிழ் நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளின் தலைவர்களும் ஈழப் பிரச்சனை தொடர்பாகப் பேசும் நிலை தோன்றியுள்ளது. வெகு விரைவில் தமிழ் நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளை இணைத்து, ஈழத் தமிழர்களுக்காகப் பேச ஒரு பொதுவான கவுன்சில்(குழு) ஒன்றை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும். இதுவே ஈழத் தமிழர் பிரச்சனை தீர ஒரு உந்து சக்தியாக அமையும்.


|    செய்தியை வாசித்தோர்: 29928